மாபெரும் ஞானி மஹபூப் சுபஹானி ...... தொடர்....4
நேற்றைய தொடர்ச்சி....4
|
|
|
மாபெரும் ஞானி மஹபூப் சுபஹானி முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
=====================================
•
•
•
•
•
புதிய பாணியில் அழைப்புப் பணி :
================================
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் 11 வயதிலிருந்து 18 வயது வரை 1088-1095 / ஹிஜ்ரி 480 - 485 ஆகிய காலகட்டத்தில் உள்ளூரில் படித்தார்கள்.
பின்னர் 18 வயதிலிருந்து 30 வயது வரை 1095 - 1107 / ஹிஜ்ரி 485 - 500 காலகட்டத்தில் பக்தாத், மக்கா, மதீனா போன்ற பல்வேறு இடங்களில் மார்க்க அறிஞர்களிடம் பயின்றார்கள்.
பின்னர் 30 வயது முதல் 40 வயது வரை 1107 - 1117 / ஹிஜ்ரி 500 - 510 காலகட்டத்தில் ஞான கல்வியை மட்டுமே பல அறிஞர்களிடம் பயின்றார்கள் .
பின்னர் காடுகளுக்குச் சென்று சில வருடங்கள் கடும் தவம் புரிந்து ஆன்ம சுத்திகரிப்பு செய்து கொண்டு மீண்டும் ஊருக்குள் வந்து 1117 -1125 / ஹிஜ்ரி 510 - 518 காலகட்டத்தில் மக்களிடையே மார்க்கப் பிரச்சாரம் செய்தார்கள்.
அப்பொழுது காஜி அபூ ஸையித் மக்ரமீ (ரஹ்) அவர்கள் பக்தாத் ருசஃபா பகுதியில் باب الازج பாபுல் அஸ்ஜ் எனும் ஏரியாவில் ஹிஜ்ரி 528 ( 1133 ) இல் ஒரு மதரஸாவை தொடங்கி நடத்தி வந்தார்கள்.
அப்பொழுது காஜி அபூ ஸைய்யித் மக்ரமீ (ரஹ்) அவர்கள், "நீங்கள் ஒருவர் ஊர் ஊராகச் சென்று மக்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதும், முஸ்லிம்களை முஸ்லிம்களாக வாழச் செய்ய அறிவுரை பகற்வதும் எவ்வளவு நாட்களுக்கு சாத்தியப்படும்?
எனவே உங்களைப் போல் பல மாணவர்களை உருவாக்குங்கள்; அவர்கள் ஒரே சந்தர்ப்பத்தில் பல நாடு நகரங்களுக்குச் சென்று இஸ்லாத்தைப் பரப்புவார்கள்; அந்தப் பணியை செய்ய இந்த மதரஸாவை நடத்துவதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்" என ஆலோசனை வழங்கினார்கள்.
அதுவும் சிறந்த யோசனையாக இருந்ததால் அதை ஏற்றுக் கொண்டு அந்த மதரஸாவை ஹிஜ்ரி 537 களுக்குப் பிறகு நடத்தத் தொடங்கினார்கள்; அவர்கள் கற்பிக்கும் விதம் பிறரை ஈர்க்கும் வண்ணம் இருந்ததாலும், இக்லாசான எண்ணத்தோடு போதித்ததாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்து கல்வி கற்றார்கள்.
அதே நேரம் பொதுமக்களுக்கும் நேரம் ஒதுக்கி உபதேசம் செய்தார்கள்; அதனைக் கேட்பதற்கும் பல நூற்றுக்கணக்கான மக்கள் வரத் தொடங்கினார்கள்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் குறித்து கிராமங்கள், நகரங்கள் என எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் நல்ல விதமாகப் பேசத் தொடங்கினார்கள்; மக்களிடையே அவர்களின் புகழ் பரவியது.
இதற்கிடையில் வியாபாரம் செய்தார்கள்; தமது 48 வது வயதில் திருமணம் செய்து கொண்டார்கள்; மக்கள் அதிகமாக வந்து ஞான உபதேசங்களை பெற்றுச் சென்றார்கள்; சில சமயங்களில் அந்த மதரஸாவே நிரம்பி வழியும்.
சில சமயம் வந்திருக்கும் மக்கள் அமர வேண்டுமே என்பதற்காக இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மதரஸாவின் கடைசியில் அமைந்துள்ள அடுப்பின் மீது அமர்ந்து உரையாற்றுவார்கள்; அந்த அளவிற்கு இட நெருக்கடி ஏற்படும்.
கற்பிப்பதிலும் மக்களுக்கு தேவையான சேவைகளை தேவையான சந்தர்ப்பத்தில் செய்வதிலும் கவனமாக இருந்து செயல்பட்டார்கள்; அதனால் மக்கள் அனைவரின் இதயங்களையும் அல்லாஹ் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் மீது அன்பு கொள்ளச் செய்தான்.
அன்றைய ஈராகில் கல்வி, ஆன்மீகப் பயிற்சி, மக்கள் சீர்திருத்தம், நல்வழியின் பால் மக்களை அழைத்தல், இஸ்லாத்தின் பால் மக்களை அழைத்தல் ஆகிய துறைகளில் முன்னோடியாக இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் திகழ்ந்தார்கள்.
உலகின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அவர்களை தேடி வந்தார்கள்; மன்னர்கள், அரசர்களை விடவும் மிகப்பெரும் செல்வாக்கை பெற்று வாழ்ந்தார்கள்.
அமைச்சர்கள் போன்ற பெரும் பதவி வகித்தவர்கள் அவர்களுக்கு கீழிருந்து செயல்பட முன் வந்தார்கள்.
அந்த காலகட்டத்தில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களை விட இஸ்லாம் மார்க்கத்திற்காக மதிக்கப்பட்டவர் வேறு யாரும் இல்லை.
ஒவ்வொரு முறையும் பொதுமக்களுக்கு உரையாற்றும் பொழுது கலீஃபாக்கள், மன்னர்கள், அமைச்சர்கள், மற்றும் அரசுப் பணியில் இருக்கும் உயர் அதிகாரிகள் அன்றைய உலகின் மாபெரும் இஸ்லாமிய அறிஞர்களில் 400 க்கும் மேற்பட்டவர்கள் இல்லாமல் ஒரு நாளும் கழியாது.
ஆசி வழங்கிய அண்ணல் நபி ஸல் :
=================================
இவர்களின் பேச்சு அனைவரையும் கவர்வதற்குக் காரணம் நபிகள் நாயகம் அவர்கள்தாம்!
ஆமாம்! இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் காடுகளில் கடும் தவம் செய்து வந்த வேளையில் கிலிர் (அலை) அவர்களை கண்ட பிறகு ஒரு நாள் கனவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தார்கள்.
அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் ஊருக்குள் சென்று அனைத்து மக்களையும் நல்வழிப்படுத்துங்கள்; இஸ்லாத்தை மக்களிடையே பரப்புங்கள்; மக்களுக்காக உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "எனது தாய்மொழி ஃபார்ஸீ நன்கு தெரியும், அரபு மொழி சரளமாக பேச வராது; இந்நிலையில் அரபியர்களுக்கு நான் எப்படி உபதேசம் செய்வேன்" என கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது உமிழ்நீரை எடுத்து இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாயில் ஏழு முறை வைத்தார்கள்.
அப்பொழுது முதல் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அரபு மொழி மட்டுமல்ல அவர்களை அணுகி எந்த மொழி உடையவர்கள் பேசினாலும் அவரவர் மொழியில் உரையாடும் ஆற்றலை அல்லாஹ் வழங்கினான்.
அதுபோலவே மறுநாள் கனவில் அலீ (ரலி) அவர்கள் தோன்றி இமாம் ஜிலானி (ரஹ்) அவர்களின் நாவில் ஆறு முறை தமது உமிழ் நீரை தடவினார்கள்; அதனால் மிக நுட்பமான கருத்துக்களைப் பேசும் வல்லமை பெற்றவராக ஆனார்கள்.
அதனால் தான் இவர்களின் சொற்பொழிவு கேட்போர் மனதை ஈர்ப்பதாகவும், கல்நெஞ்சை கரைப்பதாகவும், சொற்சுவை, பொருள் பொலிவு ஆகியன நிறைந்து காணப்பட்டது.
இவர்களின் சொற்பொழிவை கேட்க கூடும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் மதரஸாவை சுற்றி இருந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் வீடுகளை தானமாக வழங்கி மதரஸாவை விரிவு படுத்துங்கள் என கூறினார்கள். அவ்வாறே மதரஸா விரிவுபடுத்தப்பட்டது.
வாரம் ஒரு முறை, மாதம் இருமுறை என பொதுமக்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெறும் போது எழுபது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சில சமயங்களில் பங்கேற்று இருக்கிறார்கள்.
இவர்களில் அறிஞர் பெருமக்களும் அடங்குவர் ; இந்த அறிஞர்கள் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் உரையைக் கேட்டு, தத்தமது ஊர்களில் உள்ள பொதுமக்களுக்கு உபதேசிப்பார்கள்; அதனால் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் எண்ணங்களும், கருத்துகளும் பொதுமக்களிடையே சென்று இஸ்லாம் புது பொழிவை பெற்றது.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் அநேக அறிஞர்கள் அணுகி ஞான தீட்சை பெற்று சிசியர்களாக மாறினார்கள். சிலர் அவர்களின் உரையைக் கேட்டு, இறைவன் மீதுள்ள அச்சத்தால் அங்கேயே உயிரையும் விட்டிருக்கிறார்கள்.
சிலர் தம்மை முழுமையாக அல்லாஹ்விற்காக அர்ப்பணித்துக் கொண்டு துறவர வாழ்க்கையையும் கூட மேற்கொண்டு இருக்கிறார்கள்.
யூதர்கள், கிறிஸ்தவர்கள், இன்னும் பிற தெய்வங்களை வணங்குவோர் இவர்களின் உரையைக் கேட்டு கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர்.
பெரும் பாவங்கள் செய்து வந்த பல லட்சக்கணக்கானவர்கள் தம் தவறான செயலை விட்டும் நிரந்தரமாக விலகி, இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடி, நல்லவர்களாக தொடர்ந்து வாழ்ந்து மரணித்திருக்கிறார்கள்.
ஹிஜ்ரி 518 களில் சிறிய அளவில் தொடங்கிய பிரச்சாரம் ஹிஜ்ரி 561 வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
தமது உரையில் உண்மைகளை உரைப்பதற்கு அஞ்சுவதில்லை; அரசராக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், செல்வந்தனாக இருந்தாலும், படித்தவனாக இருந்தாலும், பாமரனாக இருந்தாலும் யாரையும் அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொன்னார்கள்; அதே நேரம் எவரிடத்தில் குற்றச் செயல்களை கண்டாலும் தைரியமாக எடுத்துச் சொல்வார்கள்.
ஒரு முறை கலீஃபா அவர்கள் நேர்மை தவறும் ஒருவரை நீதிபதியாக நியமித்து விட்டார்.
இந்நிலையில் கலீஃபா அவர்கள் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் சபைக்கு சொற்பொழிவு கேட்க வந்திருந்த போது கலீஃபாவை அருகில் அழைத்து, இன்ன நீதிமன்றத்தில் இன்ன பெயருடைய வரை நீங்கள் தவறாக நியமித்து விட்டீர்; அவரை மாற்றி விடுங்கள்; அவர் நீதமானவராக இல்லை; இவரை அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கச் செய்தால் மறுமையில் நீங்கள் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் குற்றவாளியாக நிறுத்தப்படுவீர்" என்று கூறினார்கள்.
கலிஃபா அவர்கள் மதரஸாவில் இருந்த மை கூட்டையும் பேனாவையும் எடுத்து, அவரை நீக்குவதாக கடிதம் எழுதி கையப்பமிட்டு சேவகரிடம் கொடுத்து அனுப்பினார்.
இமாம் ஜிலானி (ரஹ்) அவர்கள் எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்று நடக்கும் ஒரு பெருங்கொண்ட கூட்டம் உருவானது. அதனால் பெரும் நன்மைகள் மட்டுமே விளைந்தது.
Comments
Post a Comment