தென்னாட்டு ஆலிம்களின் தந்தை வேலூர் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள்
தென்னாட்டு ஆலிம்களின் தந்தை வேலூர் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள்
சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் அலுவலகத்தில் இருந்த மவ்லவீ ஜியாவுத்தீன் பாகவி ஹள்ரத் அவர்களும் நானும் 29/12/2005 அன்று ஷப்பீர் அலீ ஹள்ரத் (ரஹ்) அவர்களை சந்திக்க கானத்தூர் சென்று இருந்தோம்.
அன்று அவர்கள் அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் குறித்து சொன்ன செய்திகளில் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இது ஒரு நீண்ட பதிவுதான்! ஆனால் பயன்மிக்க வரலாறு!
•°•°•°•°
அபூ பக்ர் (ரலி) அவர்களின் வழித்தோன்றதில் தோன்றிய மவ்லானா ஷாஹ் மதார் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் மதுரையில் பிறந்து வாழ்ந்து அங்கேயே அடக்கம் ஆனார்கள்.
இவர்களின் மகன் மவ்லானா அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் இன்றைய தேனி மாவட்டத்தில் உள்ள ஜமீன் ஆத்தூரில் குடியேறினார்கள்.
இவர்களுக்கு இரண்டு ஆண் வாரிசுகள் உண்டு. ஒருவர் மவ்லானா குலாம் முஹையதீன் (ரஹ்) அவர்கள்; இவரின் மகன் வயிற்று பிள்ளை தான் வேலூர் அல் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் நிறுவனர் அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள்.
மற்றொருவர் மவ்லானா நன்னு மீரான் (ரஹ்) அவர்கள்.
இவரின் மகன் மவ்லானா முஹம்மது மதார் (ரஹ்) அவர்கள்.
இவரின் மகன் மவ்லானா அஹமதுல்லாஹ் (ரஹ்) அவர்கள்,
இவரின் மகன் மவ்லானா முஹம்மது மதார் பாகவி (ரஹ்) அவர்கள்.
இவரின் மகன் மவ்லானா அப்துல் நாஃபிவு (ரஹ்) அவர்கள்,
இவரின் மகன் தான் மவ்லானா முஹம்மது ஷப்பீர் அலி பாகவி ஹள்ரத் (ரஹ்) அவர்கள்.
அதாவது அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் தாத்தாவின் சகோதரர் வழி மகன்தான் ஷப்பீர் அலீ ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஆவார்கள்.
அஹமதுல்லாஹ் (ரஹ்)
========================
மேலே அஹமதுல்லாஹ் (ரஹ்) என்றொரு பெயரை பார்த்திருப்போம்; இவர்களுக்கும் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களுக்கும் இடையே நடந்த ஒரு கராமத் நிகழ்வை சொல்வதே இந்த உரையின் நோக்கம்.
வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் நிறுவனர் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் குடும்பத்திற்கு ஜமீன் ஆத்தூரில் "ஹாஃபிழ் குடும்பம்" என்றொரு அடைமொழியும் உண்டு.
ஏனென்றால் இந்த குடும்பத்தில் உள்ள ஆண் வாரிசுகளில் பலர் திருக்குர்ஆனை மனனம் செய்திருந்த ஹாஃபிழ்களாக இருந்தார்கள்.
அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் தந்தை கூட ஹாஃபிழ்தான்.
அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் தந்தை வேலூரில் ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழ வைக்க சென்றிருந்தபோது குத்பே வேலூர் அப்துல் லாதீஃப் (ரஹ்) அவர்களிடம் பைஅத் பெற்று நெருங்கிய தொடர்பும் கல்வியும் கற்று வந்ததால் குத்பே வேலூரின் சொல்லை ஏற்று அங்கே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்கள்.
ஹாஃபிழ் குடும்பத்தில் வந்த அஹமதுல்லாஹ் (ரஹ்) அவர்களும் ஹாஃபிழ் காரி ஆவார்.
இவர் ஜமீன் ஆத்தூரிலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்; இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தனர்.
இந்நிலையில் மனைவிக்கு மாலைக்கண் நோய் ஏற்பட்டு விட்டது; இந்த சந்தர்ப்பத்தில் அஹமதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் தம் பெற்றோர் மற்றும் மாமனார் ஆகியோரின் பொறுப்பில் மனைவியையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு சிலோனிற்கு தொழ வைக்க சென்றார்கள்.
அங்கே புத்தளம் எனும் பகுதியில் உள்ள சிலாபம் மஸ்ஜிதில் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். இவரின் மார்க்க சொற்பொழிவும் கிராஅத்தும் கேட்போரை ஈர்க்கும் வண்ணம் இருந்ததால் எப்பொழுதும் ஒரு கூட்டம் வந்து கொண்டே இருக்கும்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஹஜ் செய்யும் நோக்கத்தில் இரு ஹரம் ஷரீஃபிற்கும் சென்று ஹஜ் மற்றும் ஜியாரத்தை செய்து முடித்தார்கள்.
அங்கே ஹஜ்ஜுடைய அமலை செய்து முடித்த பிறகு மக்காவில் இருந்த மவ்லானா இஸ்மாயில் புகாரி (ரஹ்) அவர்களிடம் தங்கி சில காலம் கல்வியும், பைஅத் - ஞானத் தீட்சையும் பெற்று மீண்டும் சிலோனிற்கு வந்து இமாமத் பணியை மேற்கொண்டார்கள்.
சில மாதங்களுக்குப் பிறகு மௌலானா இஸ்மாயில் புகாரி (ரஹ்) அவர்கள் சிலோன் வந்தார்கள்; அவர்களைக் காணவும் அவர்களின் ஞான உபதேசங்களை கேட்கவும் பெரும் கொண்ட கூட்டம் வந்து கொண்டே இருந்தனர்.
இவர்களில் ஒருவராக அஹமதுல்லாஹ் (ரஹ்) அவர்களும் இருந்து ஞான உபதேசங்களை பெற்று வந்தார்கள்.
இந்நிலையில் மவ்லானா இஸ்மாயில் புகாரி (ரஹ்) அவர்கள் சிலோனில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்தப் பெண்ணின் சகோதரியை மவ்லானா இஸ்மாயில் புகாரி (ரஹ்) அவர்களின் ஆணைக்கிணங்க மவ்லானா அஹமதுல்லாஹ் (ரஹ்) அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பின்பும் சிலோனில் இருந்தவரை மூத்த மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தேவையான பணம் காசுகளை அனுப்பி வைத்துக் கொண்டே இருந்தார்கள்.
அஹமதுல்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு முஹம்மது மதார், முஹம்மது காசிம், பாத்திமா, அப்துத் தாஹிர் என்ற நான்கு குழந்தைகள் சிலோனில் பிறந்தனர்.
சொந்த ஊரை விட்டு சிலோனிற்கு வந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் மீண்டும் சொந்த ஊருக்கு போக வேண்டும் என விரும்பிய அஹமதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் தம் மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜமீன் ஆத்தூர் வந்து சேர்ந்தார்கள்.
இவர்களை அழைப்பதற்காக அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் அண்ணன் மகன் சின்ன ஹள்ரத் என்ற குலாம் முகைதீன் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் சென்று அழைத்துக் கொண்டு மாலை மஃரிப் நேரத்திற்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
மவ்லானா அஹமதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் சிலோனில் இருந்த போதே ஆத்தூரில் இருந்த இரு மகள்களும் இறந்துவிட்டிருந்தனர்.
மாலைக்கண் நோயோடு வாழ்ந்து வந்த மனைவி அவர்கள் இருட்டில் தடுமாறி விழுந்து இறந்து விட்டிருந்தார்.
இவரை நல்லடக்கம் செய்துவிட்டு மக்கள் ஒன்று திரண்டு, இறந்த வீட்டிற்கு எதிரே நின்று துஆ ஓதிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மவ்லானா அஹமதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் தம் மனைவி மக்களுடன் வீட்டிற்கு வந்ததை ஊர் மக்கள் அனைவரும் பார்த்தார்கள்.
இந்த சூழலில் மனைவி மக்களோடு வந்ததை ஊர் மக்கள் வெறுத்தார்கள்.
ஊர் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வாழ்ந்து வந்த வேளையில் மூத்த மகனின் 16 ஆம் வயதில் மவ்லானா அஹமதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் காலமானார்கள்.... இன்னாலில்லாஹி....
இரண்டாவது மகன் முஹம்மது காசிம் அவர்கள் தாய் வழி தாத்தா பாட்டியினரிடம் சிலோனிற்கு சென்று விட்டார்.
மீண்டும் மூத்த மகனின் 18 ஆம் வயதில் தாயும் ஜமீன் ஆத்தூரிலேயே காலமாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி....
தாயை நல்லடக்கம் செய்து விட்டு வந்த மூத்த மகன் முஹம்மது மதார் அவர்கள், "இனி என்ன செய்வது? எப்படி வாழ்வது? பருவ வயதை நெருங்கிய 13 வயது தங்கை, 9 வயது தம்பி ஆகியவர்களை எப்படி காப்பாற்றுவது?
ஏதேனும் வேலைகளுக்கு செல்வதாக இருந்தால் நாம் வெளியே செல்ல வேண்டும்; அந்த நேரத்தில் இவர்களை யார் பார்த்துக் கொள்வது? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
ஊர்வாசிகள் முன்பு போன்று மிகக் கடுமையாக இல்லாவிட்டாலும் இன்னும் கோபமாகத்தான் இருந்தார்கள்.
இந்த நிலையில் என்ன செய்வது என்று யோசித்து முடிவு எடுக்க முடியாமல் இரவு வெகு நேரத்திற்கு பிறகு கண்ணயர்ந்தார்கள்.
அதிகாலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு கனவு;
அதில் ஒரு பள்ளிவாசல்; அந்தப் பள்ளிவாசலில் மக்கள் திரளாக அமர்ந்திருக்கிறார்கள். அதில் மாப்பிள்ளையாக முஹம்மது மதார் - அதாவது கனவு காண்பவர் அமர்ந்திருக்கிறார்.
அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஈஜாப் கபூல் சொல்லித் தருகிறார்கள்; அதாவது "இன்னாருடைய மகள் மரியம் பீவியை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் சம்மதமா?" என கேட்கிறார்கள். "சம்மதம்" என மாப்பிள்ளை பதில் கூறுகிறார்.
இந்தக் கனவை கண்டதும் திடீரென விழித்த முஹம்மது மதார் அவர்கள் தாயை இழந்து, தந்தையை இழந்து, உற்றார் உறவினர்களை இழந்து, ஊராரை இழந்து இருக்கும் நமக்கு அந்த மரியம் பீவி மனைவியாக அமைந்துவிட்டால் நமது உடன் பிறப்புகளுக்கு பாதுகாப்பாக தான் இருக்கும் எனவும்,
ஆனாலும் இந்த இளம் வயதில் திருமணம் செய்வதா? மேலும் அந்த மரியம் பீவி யார்? எந்த ஊர் காரர்? இதே ஊரில் இருக்கிறாரா? தாம் கண்ட கனவை யாரிடமாவது சொல்லலாமா? தவறாக நினைத்துக் கொள்வார்களா?
ஒரு சமயம் நாம் எவரிடமாகிலும் அந்த கனவை சொன்ன பிறகு, அப்பெயர் கொண்ட பெண் உண்மையாக இந்த ஊரில் இருந்தால், ஏற்கனவே இவருக்கும் அந்தப் பெண்ணிற்கும் தொடர்பு இருக்கிறது;
அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளவே அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் பெயரை தவறாக பயன்படுத்துகிறான் என்ன சொல்லிவிடுவார்களோ? என பலதையும் யோசித்து விட்டு இந்த கனவை யாரிடமும் சொல்வதில்லை என முடிவு செய்து கொண்டார்.
ஒன்றுவிட்ட தம்பி மவ்லானா அஹமதுல்லாஹ் (ரஹ்) அவர்களும் அவரது மனைவியும் இறந்து போனதை விசாரிப்பதற்காக அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் வேலூரில் இருந்து புறப்பட்டு ஜமீன் ஆத்தூருக்கு வந்தடைந்தார்கள்.
முஹம்மது மதார் அவர்களின் இல்லம் சென்று தாய் மற்றும் தந்தையின் மரணம் குறித்து விசாரித்தார்கள். ஆறுதல் சொன்னார்கள்; செலவிற்கு தாராளமாக பணம் காசுகளை கொடுத்தார்கள்.
தாம் கண்ட கனவின் பலன் என்ன என்று சாச்சாவிடம் கேட்கலாமா? என நினைத்தார்கள்; ஆனால் கேட்கவில்லை.
அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஊருக்கு வரும்போது எல்லாம் உரையாற்றுவது போல் அன்றும் சிறிது நேரம் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்;
இஷாவுடைய நேரத்தில் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவரின் பெயரையும் அவரின் உறவு முறையையும் சொல்லி அழைத்து "உங்கள் மகளை எனது தம்பி மகன் முஹம்மது மதாருக்கு திருமணம் செய்து வையுங்கள்; எந்த குறையும் இல்லாமல் வளமாக வாழ்வார்கள்; நானும் இருக்கின்றேன் பார்த்துக் கொள்வேன்" எனக் கூறி பெண் கேட்டார்கள்.
அவர் தன் மனைவி மக்களிடம் ஆலோசனை செய்து விட்டு வந்து சம்மதம் தெரிவித்தார்.
அதே சபையில் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் நிக்காஹ்வை நடத்தி வைத்து ஈஜாப் கபூல் சொல்லித் தரும்போது "இன்னாருடைய மகள் மரியம் பீவியை உனக்கு நான் திருமணம் செய்து வைத்துவிட்டேன் சம்மதமா?" எனக் கேட்டார்கள். மாப்பிள்ளை 'சம்மதம்' என கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு கண்ட கனவு அப்படியே நனனவாகிவிட்டதை உணர்ந்து அல்லாஹ்விற்கு நன்றி சொன்னார்.
பிறகு அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களிடம் தாம் கண்ட கனவை முஹம்மது மதார் அவர்கள் கூறிய போது சிரித்துக்கொண்டார்கள்.
தமிழ்நாட்டு ஆலிம்களின் தந்தை, அஃலா ஹள்ரத், மவ்லானா, முஹம்மது அப்துல் வஹ்ஹாப் காதிரி (ரஹ்) அவர்கள் சிறந்த நற்குணங்களுக்கு சொந்தக்காரர்.
அதனால் தான் அவரின் சேவைகள் அங்கீகரிக்கப்பட்டதின் அடையாளமாக தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மதரஸாக்களும் லட்சக்கணக்கான ஆலிம்களும் தோன்றி தமிழகத்தில் அறிவொளி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்கண்ட நிகழ்வு, என்னிடம் இருந்த தகவல்களில் ஒரு பகுதிதான் பகிர்ந்து இருக்கிறேன். இன்னும் அஃலா ஹள்ரத் ரஹ் அவர்கள் சம்பந்தமான செய்திகள் இருக்கின்றன; வாய்ப்பு ஏற்படும் போது பதிவிடுகிறேன்.
ربيع الآخر ـ ٢٢ ـ ١٣٣٧
يوم وصال شيخنا اعلى حضرت الشاه عبد الوهاب القادري عليه الرحمة والرضوان ( مؤسس المدرسة الباقيات الصالحات)
ரபியுல் ஆகிர் பிறை 22/ 1337 அன்று காலமானார்கள். அவர்கள் காலமாகி இன்றோடு 110 வருடங்களை கடந்து விட்டது. அவர்களுக்காக அனைவரும் அல்லாஹ்வுடன் இறைஞ்சுங்கள்.
அன்புடன்
BMK.
Comments
Post a Comment