தமிழகத்தின் தலைமை காஜீ....

தமிழகத்தின் தலைமை காஜீ....
~~~~~~~~~~~~~.    ~~~~~~~~~~~~~
மிகப்பெரும் அறிவு ஞானத்திலும் ,  யாருக்கும் பயப்படாமல், அடிபணியாமல் மார்க்க தீர்ப்பை மிக தைரியமாக தனக்கே உரித்த பாணியில் உரக்கச் சொல்வதிலும் , வாழும் காலத்தில் அரசின் எந்த சலுகையும் பெறாமல் எளிமையாய் வாழ்ந்து மறைந்த கண்ணியத்திற்குரிய மர்ஹூம் ஸலாஹுதீன் முஹம்மது அய்யூபி (ரஹ்) அவர்களுக்குப் பின் அந்த காஜி யின் இடத்தை யார் நிரப்புவது.? என்கிற மிகப்பெரும் கேள்வி தமிழக ஆலிம் பெருமக்கள் இடத்திலும் தமிழ் சமூகத்திடத்திலும் இருந்து கொண்டிருந்தது. அந்த இடத்தை பெற்றுக் கொள்வதற்கு அரசியல் ஆதரவுடன் பெரும் போட்டியும் நிலவியது.
தமிழக முஸ்லிம் சமூகம் தங்களுக்கு பொருத்தமான தலைமை காஜியை தேடிக் கொண்டிருந்தது.

பதவிகள் சிலரை அலங்கரிக்கும். சிலரைக் கொண்டு பதவி தன்னை அலங்கரித்துக் கொள்ளும். அப்படி தலைமை காஜி என்கிற பதவிக்கு தகுதிமிக்க ஒருவராய் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் எங்களது கண்ணியத்திற்குரிய  ஆசிரியத்தந்தை உஸ்மான் முஹ்யித்தீன் ஃபாஜில் பாகவி ஹழ்ரத் அவர்கள்.

"தகுதிமிக்க"... என்பது போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போகிற பொருத்தமில்லாத புகழார வார்த்தை அல்ல. ஹழ்ரத் அவர்களுக்கு பொருத்தமான வார்த்தை அது. 

கொஞ்சம் அவர்கள் வாழ்க்கை வரலாறுக்குள் சென்று வந்தால் அவர்களின் தகுதி என்ன.? என்பது நமக்கு புரிய வரும்.

ஹல்ரத் அவர்களுக்கு சொந்த ஊர் பேட்டை .
இவர்களின் தந்தையும் ஆலிம் ஆகும் . இவர்கள் தந்தையின் பெயர் பீர் முஹம்மது ஆலிம் நூரி .

ஹழ்ரத் அவர்கள் 1957 முதல் 1960 வரை பேட்டை ரியாலுல்ஜினான் அரபிக் கல்லூரியிலும் , 1960 முதல் 1962 வரை கூத்தாநல்லூர் ஃபைஸுல் பாக்கியாத் அரபிக் கல்லூரியிலும் 1962 முதல் 63 வரை லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியும் அதன் பின் 1963 மற்றும் 1964 தமிழகத்தின் தாய் கல்லூரி வேலூர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரியிலும் பயின்று ஆலிம் பாகவி பட்டம் பெற்றார்கள்.

அதன் பின் 1964 மற்றும் 1965 இரண்டு ஆண்டுகள் உபி சகாரன்பூரில் உள்ள மலாஹிருள் உலூம் அரபிக் கல்லூரியில் ஃபாஜில் பட்டம் பெற்றார்கள். அதன் பின் 1966 மற்றும் 1967 இரண்டு ஆண்டுகள் தேவ்பந் தாருல் உலூமில் முஃப்தி பட்டம் பெற்றார்கள்.

ஆக தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் கல்வி கற்பதிலேயே மிகுந்த ஆர்வத்துடன் செலவழித்த அற்புத மாமேதை தற்போது காஜியாய் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய ஹல்ரத் பெருந்தகை அவர்கள் என்பதை இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். 

மேலும் 1968 முதல் 1998 வரை தமிழகத்தின் தாய் கல்லூரி வேலூர்  பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்   அரபிக் கல்லூரியில் பேராசிரியராகவும்,  மிகச் சிறந்த முஃப்தியாகவும், அதன் பின் 1998 முதல் 2022 வரை பாக்கியாத்தின் முதல்வராகவும் திறம்பட பணி செய்தார்கள் நம் ஹலரத் அவர்கள். இன்று வரை தமிழகத்தின் தலைசிறந்த முஃப்தியாகவும் , தமிழகத்தின் இஸ்லாமிய மக்களுக்கு பல்லாயிரக்கணக்கான ஃபத்வாக்கள் எனும் மார்க்க தீர்ப்பினை வழங்கிய மாபெரும் முஃப்தி நம் ஹழ்ரத் என்று சொன்னால் மிகையில்லை.

ஏதோ ஆலிம் பட்டம் பெற்று மதரஸா கல்வியை மட்டுமே கற்றவர்கள் என்று குறுகிய வட்டத்திற்குள் ஹலரத் அவர்களை சுருக்கி விட முடியாது. 
மறைந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் நெருக்கம் பெற்றவர்களாகவும் மேலும் அவர்களிடம் அரசியலும், சமூக நீதியும் கற்ற அரசியல் அறிவும் நிறையவே பெற்றவர்கள் தற்போதைய தமிழக காஜியான நம் ஹலரத் பெருந்தகை அவர்கள்.
எந்த அளவுக்கு என்றால் 1966 இல் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களை காயிதே மில்லத் சாஹிப் அவர்கள் சந்திக்கச் சென்றபோது காயிதே மில்லத் அவர்களோடு துணையாகச் சென்றவர்கள் நமது தமிழகத்தின் தற்போதைய தலைமை காஜி ஹழ்ரத் பெருந்தகை அவர்கள். 

அதேபோல் ஆன்மீகத்தில் மறைந்த முகமது ஜக்கரியா காந்தல்வி (ரஹ்) அவர்களிடம் இறைஞானக் கல்வி கற்றதோடு , ஆன்மீக குரு அஷ்ஷைக் ஷகியித்தீன் (ரஹ்) அவர்களின் தரிக்கத்தின் கலீபாவாகவும் நியமிக்கப்பட்ட ஞான மாமேதையாக  தமிழகத்தின் தலைமை காஜியாக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய நம் ஹழ்ரத் பெருந்தகை அவர்கள் இருக்கிறார்கள் என்கிற அவர்களின் ஆன்மீக வரலாறையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆக மொத்தத்தில் தகுதிமிக்க ஒரு ஆலிம் பெருந்தகைக்கு தகுதிமிக்க தமிழகத்தின் அரசு காஜி என்கிற பதவி வழங்கப்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் குறிப்பாக தமிழக ஆலிம் பெருமக்களுக்கு திருப்தியையும் , பெரு மகிழ்வையும் தரக்கூடிய ஒரு செய்தி என்பதில் சந்தேகம் இல்லை. 

 தமிழகத்தின் தலைமை காஜியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய கண்ணியத்திற்குரிய நம் ஆசிரியத்தந்தை உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி ஹழ்ரத் அவர்களின் சேவைகளை அல்லாஹ் சிறப்பாக்கி தந்தருள்வானாக. மென்மேலும் அவர்களுடைய அந்தஸ்தையும் புகழையும் அல்லாஹ் உயர்வானதாக ஆக்குவானாக.  ஆமீன்.

*செய்யது அஹமது அலி. பாகவி*

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்