இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் குறித்து தமிழில் வெளிவந்துள்ள நூல்கள்:
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் குறித்து தமிழில் வெளிவந்துள்ள நூல்கள்:
நேற்றைய தொடர்ச்சி.......48
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்
=====================================
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் தூய்மையான வாழ்க்கை முறை எந்த அளவு மக்களிடம் சென்று சேர்ந்து இருக்கிறது என்பதற்கு கீழ்காணும் நூல்கள் ஓர் ஆதாரம்.
ஊடகங்கள் எதுவும் இல்லாத அந்த காலத்தில் அவர்கள் குறித்து, நூல்கள் எழுதப்படுகிற அளவிற்கு செய்தி நம்மை வந்தடைந்திருப்பதை காணும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.
1. முகியித்தீன் புராணம் எனும் நூலை முதலில் செய்கு அப்துல் காதிறு நயினார் எனும் சேகனாப் புலவர் 1810 லும், வண்ணக்களஞ்சியப் புலவர் 1814 லும் பாடினர்.
அதன் தொடர்ச்சியாக இலங்கையைச் சேர்ந்த பத்றுத்தின் புலவர் அவர்கள் 1816 இல் முழுமைப்படுத்தி 3983 பாடல் வழியாக இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார்கள். இது மே 20, 1816 களில் இந்த நூல் வெளியிடப்பட்டு உள்ளது.
பழம்பெரும் இஸ்லாமிய காப்பியங்களில் மூன்றாவது காப்பியமாக இந்த நூல் கருதப்படுகிறது.
இந்த நூல் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கின்றன; முதல் பாகத்தில் 2162 விருத்தங்களும் இரண்டாம் பாகத்தில் 1821 விருத்தங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த நூலில் மொத்தம் 74 படலங்கள் இருக்கின்றன.
2. காயல்பட்டினத்தைச் சேர்ந்த சேகுனா புலவர் எனப்படும்
ஷெய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் அவர்களால் குத்பு நாயகம் (முகியித்தீன் பூராணம்) எனும் நூல் 1852 களுக்கு முன்பு எழுதி வெளியிடப்பட்டது.
இந்த நூலில் முகியித்தீன் ஜீலானி (ரஹ்) அவர்களின் பிறப்பு, கல்வி, ஞானம், அதிசயங்கள், துறவற வாழ்க்கை, மக்களுக்குத் தந்த ஆன்மீக வழிகாட்டுதல், இறை அன்பு, பணிவு, வலியின் குணங்கள் ஆகியவற்றை விவரித்து 1,230 பாடல்கள் வழியாக கூறுகின்றது. இதற்கு விளக்கங்களும் கூறப்பட்டுள்ளது.
பேராசிரியர் மு. அப்துல் கரீம் எம் ஏ அவர்களால் ஆயிஷா பதிப்பகத்தின் மூலம் அதிராம்பட்டினத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
3. தஃப்ரீஜுல் காத்திர் ஃபீ மனாகிபிஷ் ஷைகு அப்தில் காதிர் -
تَفْرِيجُ الخاطِرِ فِي مَناقِبِ الشَّيْخُ
عَبْدِ القادر
எனும் நூலை அப்துல் காதிர் பின் முஹ்யித்தீன் அல் அர்பலீ என்பவர் கி.பி. 1891 , ஹிஜ்ரி 1309 இல் கைகளால் அரபு தமிழ் எனும் அர்வி மொழியில் எழுதி பிரின்டிங் செய்யப்பட்டுள்ளது.
இதில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, நற்குணங்கள், ஆன்மீக போதனைகள், கராமத் - புதுமைகள் என எழுதப்பட்டுள்ளது. இந்த நூலுக்குள் இன்னும் நான்கு நூல்கள் இணைக்கப்பட்டுள்ளது; இந்த நூல் மொத்தமாக 429 பக்கங்களில் உள்ளது. இது சதக்கத்துல்லா லெப்பை (ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட நூலாகும்.
4. முஹ்யித்தீன் மவ்லிது காயல்பட்டிணத்தைச் சோர்ந்த மஹ்மூத் (ரஹ்) என்பவரால் 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இந்த நூலில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் வரலாற்றை கவிதை நடையில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இந்த மவ்லிது நூலை இன்றும் இஸ்லாமிய இல்லங்களில் பயபக்தியோடு ஓதப்பட்டு வருகிறது.
இந்த நூலை கடலோர கிராமத்தின் இமாம் பூஸிரி, ஆலிம் கவிஞர் மௌலானா தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி ஆலிம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, எம். முஹம்மது சுலைமான் / சுலைமானியா பப்ளிசர்ஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
5. திருநெல்வேலி மாவட்டம் பொட்டல்புதூரை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் வாழ்ந்த பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த ஜெய்லானி பக்கீர் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களால் "முஹியீத்தீன் அந்தாதிமாலை" எனும் நூல் 1930 களுக்கு முன்பு இயற்றப்பட்டுள்ளது.
நான்கு வரி பாடல் வடிவில் 46 அடிகளில் இந்த நூல் இயற்றப்பட்டுள்ளது.
6. "பெரிய முஹ்யித்தீன் மாலை"
பக்கீர் மதாறுப் புலவர் (ரஹ்) அவர்கள் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களைப் புகழ்ந்து பாடிய ஒரு இஸ்லாமிய இலக்கியம்.
இது "ஐந்து முனாஜாத்துகளுடன்" என்ற நூலின் ஒரு பகுதி. இந்த நூல் 1930-ல் சென்னை கார்டியன் பிரஸ்ஸில் அச்சிடப்பட்டுள்ளது.
7. முஹ்யித்தீன் ஆண்டகை சத்துரு சங்காரம் - எனும் நூலை எழுதியது யார் என தெரியவில்லை; ஆனால் இதில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் வரலாற்றில் போற்றுதலுக்குரிய நிகழ்வுகள் சொல்லிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் 40 வகையான தமிழ் பாடல்கள் இருக்கின்றன; அவை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் சிறப்பு பெயர்களை கொண்டு நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நான்கு வரிக்கும் பலன்கள் கூறப்பட்டுள்ளது; இதனை ஓதினால் ஷைத்தானுடைய தீண்டுதலில் இருந்து பாதுகாப்பு பெறலாம் என்றும், இதனை ஓதினால் இறைவனுடைய நெருக்கங்களை பெறலாம் என்பது போன்று பலன்கள் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு வகையான அச்சடங்களும் போடப்பட்டுள்ளது.
இந்த நூல் முதன்முதலாக 1946 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.
8. மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை (பாகம் 1,2,3.) ஆசிரியர்: ஆர். பி. எம். கனி. வாழ்க்கை வரலாறும், “ஃபுதூஹுல் கைப்” உபதேசங்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நூல் மூன்று பாகங்கள் உடையது. ஒவ்வொரு நூலும் 400 பக்கங்கள் குறைவில்லாதது. 1960 களுக்கு பிறகு வெளிவந்தது.
ஃபுதூஹுல் கைப் எனும் அரபு நூலை மையமாகக் கொண்டு முதல் பாகமும், ஃபதஹுர் ரப்பானி எனும் அரபு நூலைக் கொண்டு இரண்டாவது பாகமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஆற்றிய 49 உரைகள் இடம் பெற்றுள்ளது.
9. உத்தமபாளையம் PSK. முஹம்மது இப்ராஹீம் பாகவி (ரஹ்) அவர்கள் 29 நூல்கள் எழுதி இருக்கிறார்கள்; அதில் ஒன்று "வலிகள் கோமான் முஹ்யித்தீன் ஆண்டகை வாழ்க்கை வரலாறு" என்பதாகும்.
இந்த நூல் ஆஸ்தானா எனும் உருது பத்திரிக்கையின் சிறப்பு மலராக வெளிவந்திருந்த 'கவ்ஸுல் அஃலம் நம்பர்' எனும் நூலை மையமாக வைத்து 184 பக்கங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. 1972 களுக்கு முன்பு வெளிவந்தது.
10. MRM. அப்துல் ரஹீம் (ரஹ்) அவர்கள் வலிமார்கள் வரலாறு எனும் பெரும் நூலை எழுதி இருக்கிறார்கள். அந்த நூலில் 50க்கும் மேற்பட்ட பக்கங்களில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் குறித்த வரலாற்றினை பதிவு செய்திருக்கிறார்கள். இது 1982 க்கு முன்பு வெளிவந்தது.
11. "ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)" எனும் பெயரில் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் ஆதாரபூர்வமாக விளக்கும் நூல்!
இஸ்லாமிய அறக்கட்டளை (IFT)இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. சையத் அபுல் ஹசன் அலி நத்வி (ரஹ்) அவர்கள் எழுதிய உருது நூலை தமிழில் காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இது 1985 ஆம் ஆண்டு வெளிவந்தது.
12. ஏற்கனவே நான் எழுதி வெளிவந்துள்ள மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ் ) எனும் நூல். இது 2012 ஆம் ஆண்டு வெளிவந்தது.
13. இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர் அப்துல் காதர் ஜீலானி , இதன் ஆசிரியர் , மௌலானா அபுல் ஹசன் அலீ நத்வீ தமிழில் : ஷாஹுல் ஹமீது உமரீ பக்கங்கள் : 84
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மாபெரும் சீர்திருத்தவாதிகளுள் ஒருவராகவும் ஆன்மிக வழிகாட்டிகளுள் சிறந்தவராகவும் விளங்கிய அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) என்னும் ஆளுமையின் வாழ்வு பற்றியும் பணிகள் பற்றியும் விளக்கும் நூல் இது.
இது அல்லாமல் அரபு மொழியில் சில அரபு கவிதைகள் / பைத்துகள் அடங்கிய யா குதுபா போன்ற பல சிறு நூல்களும் தமிழ்நாட்டில் இருந்து வெளியாகி இருக்கின்றது.
முகநூலிலும் இணையதளத்திலும் பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் குறித்த பிற மொழி நூல்கள் நாளை தொடரும்.......
https://eap.bl.uk/project/eap1457
https://rmrl.in/en/onlinecat
Comments
Post a Comment