இருந்த இடத்திலிருந்து இறைவனைக் காணலாம்

இன்று இரவு மிஅராஜ்

இருந்த இடத்திலிருந்து 
இறைவனைக் காணலாம்
:::::::::::::::::::::--------------::::::::::::::::::::::
الصلاة معراج المؤمن

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். தொழுகை முஃமீன்களின் மிஅராஜ் ஆகும். 

அஸ்ஸலாத் - தொழுகை எனும் சொல் திருக்குர்ஆனில் 85 முறை இடம் பெற்றுள்ளது.

17 × 5 = 85 

ஒரு நாளைக்கு ஐந்து நேரத் தொழுகை. அதில் 17 ரக்அத்துகள் உண்டு. அதைத்தான் மேற்கண்ட கணக்கில் 5 ம், 17 ம்  சொல்லிக் காட்டுகிறது. 

இவ்வளவு துல்லியமாக ஒரு நேர்கோட்டில் இதை அமைத்தது  அல்லாஹ்வைத் தவிர வேறு யாரால் முடியும்?

நபி (ஸல்) அவர்களுக்கு சித்ரத்துல் முன்தஹா அருகே அல்லாஹ் தொழுகையை வழங்கினான். 

உள ஓர்மையோடு மனிதன் தொழும்போது, தன் இருப்பிடங்களை விட்டு, படைப்பினங்களை விட்டு இறைவனோடு ஆத்மார்த்தமாக  நெருங்குகிறான். 

மனிதன் தொடர்ந்து உள ஓர்மையோடு தொழுதால் சித்ரத்துல் முன்தஹாவில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை  சந்தித்தது போல் நாமும் இருந்த இடத்திலிருந்து அல்லாஹ்வை சந்திக்க முடியும் என்பதைத்தான் அந்தச் சொல் கூறுகிறது.

தொழுகை, இறைவனும் மனிதனும் சந்திப்பதற்கான ஓர் இடம். எனவே ரசித்து, சந்தோசமாக, திருப்தியாக, உள ஓர்மையோடு தொழ வேண்டும். அலட்சியமாக, சோம்பலாக தொழுகைக்கு நெருங்காதீர்.

நபி (ஸல்) அவர்கள் மிஅராஜ் பயணத்திற்கு சென்ற விபரத்தை திருக்குர்ஆனில் அல்லாஹ் 17 வது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறான்.

பதினேழாவது அத்தியாயத்தில் 17 ரக்அத்துகள் கடமையானதை அல்லாஹ் அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே சொல்லிக் காட்டுகிறான்.

நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாகவே நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தொழுகை அல்லாஹ்வினால் நேரடியாக வழங்கப்பட்டது.

இறைவனுடைய அனைத்து சட்டங்களும் மனிதன் வாழும் இடத்தை நோக்கி வந்தது. ஆனால் தொழுகை அதை வழங்கும் இறைவனை நோக்கிச் சென்று வாங்கி வரப்பட்டது.

ஒரு அடியான் தொழும் போது தன் இறைவன் தன் எதிரே நிற்பது போன்று கருதி

 إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ 

நான் உன்னையே வணங்குகிறேன் 
நான் உன்னிடமே உதவியும் கேட்கிறேன் என்று கூறுகிறான்.

 قال نبينا عليه الصلاة والسلام: «إن أحدكم إذا قام في صلاته فإنه يناجي ربَّه، أو إن ربه بينه وبين القبلة»، 

உங்களில் ஒருவர் தொழுகைக்கு நின்றால், நிச்சயமாக அவர் தன் இறைவனோடு தொடர்பில் இருக்கிறார். அல்லது அவருக்கு எதிரே கிப்லா புரத்தில் இறைவன் இருக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது போல் ஒவ்வொரு அடியானும் தொழ வேண்டும். 

தொழுகை முஃமீன்களின் மிஅராஜ் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்வதின் நோக்கம் என்னவென்றால் தாம் மிஅராஜ் பயணத்தில் அனுபவித்த இன்பங்கள் யாவற்றையும் எனது சமுதாயத்தினரும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான். 

மிஅராஜ் உடைய நிலையை அனைவரும் அனுபவிக்க வேண்டுமானால் தொழுகையின் மூலம் அதை பெறலாம் என வழிகாட்டி இருக்கிறார்கள். 

தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்."

தொழுகைக்காக தக்பீரைக் கட்டிக் கொண்டு ஏழு வசனங்கள் கொண்ட ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதத் தொடங்கியதும் இறைவனோடு தொடர்பு கிடைத்து விடும். 

தொலைபேசியில் சில எண்களை அழுத்தியதும் ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மனிதனை தொடர்பு கொண்டு காணொளி வாயிலாகவே பேச முடிகிறது என்றால் தொழுகை நமக்கு இறைவனோடு தொடர்பை ஏற்படுத்தாதா? 

தொழுகை இன்று சடங்காக மாறி வருகிறது. அதை சரியாகச் செய்தால் சங்கடங்கள் விலகி சந்தோசங்கள் பெருகும்.

இன்று சிலர் தொழுகையில் நின்றதும் அவர்களுக்கு பல சிந்தனைகள்  ஏற்படுகிறது. மறந்தவைகள் எல்லாம் நினைவுக்கு வருகிறது.

அல்லாஹ்வை தொழுகையில் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அல்லாஹ்வைத் தவிர அனைத்தையும் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான்.

கவ்லா என்னும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனது கணவர் என்னை அவரது தாய்க்கு ஒப்பிட்டு பேசி விட்டார் ; அதனால் நான் தலாக் ஆகி விட்டேன்; என் இளமை சென்று விட்டது; என் அழகு இல்லாமல் போய்விட்டது; என் உடலில் சக்தி குறைந்து விட்டது; குழந்தை பெற முடியாத வயோதிகத்தை அடைந்து விட்டேன்.

இந்நிலையில் அவர் தவறுதலாக என்னை தலாக் விட்டு விட்டார் அது எப்படி தலாக்காக ஆகும்? எனவே இந்த சட்டத்தை மாற்றுங்கள்" என கேட்டுக் கொண்டார்.

நபி (ஸல்) அவர்கள், "சட்டம் அனைவருக்கும் சமமானது; சட்டத்தை என்னால் மாற்ற முடியாது; நான் என்ன செய்வேன்" என்று  வருத்தமாக கூறினார்கள்.

ஆனால் கவ்லா அம்மையார் அவர்கள் விடுவதாக இல்லை. தொடர்ந்து கெஞ்சிக் கொண்டே இருந்தார். அழுது கொண்டே இருந்தார்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்களின் தர்ம சங்கடமான நிலையைப் பார்த்து விளங்கிக் கொண்டு "அதுதான் முடியாது என்று சொல்லிவிட்டார்களே....... பிறகு ஏன் இங்கே நின்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறீர்..... உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள்" என அதட்டினார்கள். அவர்களை இழுத்துச் சென்று வெளியில் விட்டார்கள்.  

கவ்லா அம்மையார் அவர்கள் தம் இல்லத்திற்குச் சென்றார்கள். 

சிறிது நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்தது. 28 வது ஜுஸுவின் முதல் நான்கு வசனங்கள் அருளப்பட்டது. 

நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்து, "கவ்லாவை அழைத்து வா!" என்று அனுப்பினார்கள். 

அன்னை கவ்லா அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி ( ஸல்) அவர்கள், "நீங்கள் இங்கிருந்து சென்றதும் என்ன செய்தீர்?

கவ்லா : உளூ செய்து கொண்டு இரண்டு ரக்அத்துகள் தொழுது  இறைவனிடம் என் நிலையை எடுத்துச் சொன்னேன்.

நபி (ஸல் ) அவர்கள், "அல்லாஹ் உங்கள் கோரிக்கையை ஏற்று உங்கள் கணவர் உங்களை தாய்க்கு ஒப்பிட்டு பேசியது செல்லாது அதாவது அது தலாக்காக ஆகாது என்று சொல்லிவிட்டான்; எனவே நீங்கள் உங்கள் கணவரோடு சேர்ந்து வாழுங்கள்" என சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

இவ்வளவு பெரிய அண்டத்தில், ஆகச்சிறிய பூமியில், அதில் மதீனா என்னும் சின்ன நிலப்பரப்பில், அதில் கவ்லா அம்மையாரின்  சின்ன குடிசை வீட்டில்  இருந்து அல்லாஹ்வை தொடர்பு கொண்டு தம் கோரிக்கையை முன் வைத்ததும்  அகிலங்களின் அதிபதி அல்லாஹ்விற்கு சென்றடைந்து இருக்கிறது என்றால் அது தொழுகையின் மூலம் அல்லவா!

எனவே நாம் தொழுகையில் தக்பீரை கட்டி விட்டால்  இறைவனோடு பேசுகிறோம். அப்படி பேசியதால்தான் அந்த அம்மையாருக்கு உடனே பதில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தி பரவி வந்த நேரத்தில் நபிகளாரின் நடைமுறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மிகவும் துன்பமாக இருந்தது. 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் என் விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிப்பான் என்று சொல்லிவிட்டு தொழுது துஆ செய்தார்கள். மறுகணமே அந்நூர் அத்தியாயத்தில் பத்து வசனங்கள் அருளப்பட்டு அவர்கள் பத்தினி என இறைவன் பறைசாற்றினான். 

எனவே தொழுகை மூலம் இறைவனை உடனே தொடர்பு கொள்ள முடியும் என்பதை மனதில் நிறுத்தி தொழுங்கள்.

இன்றைய மிஅராஜ் உடைய தினத்தில் இருந்து இப்படித்தான் நான் தொழுவேன் என்று நீங்கள் சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்