1438 வது ஹஜ்ஜின் உருக்கமான நினைவுகளும் அனுபவங்களும்



1438 வது ஹஜ்ஜின் உருக்கமான நினைவுகளும் அனுபவங்களும் 
=================÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ 

﴿فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ﴾

“அறிவுடையவர்களே! இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.”
(ஸூரத்துல் ஹஷ்ர் 59:2)

அருள்மறை திருக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளையும், முந்தைய சமூகங்களின் வாழ்க்கைச் சம்பவங்களையும் எடுத்துரைக்கிறான். அவற்றைக் கூறிவிட்டு, அவற்றிலிருந்து மனிதர்கள் படிப்பினை பெற வேண்டும், நல்வழியில் நடக்க வேண்டும், தவறான வழிகளில் இருந்து விலகி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வாறான வசனங்களை அல்லாஹ் அடிக்கடி குறிப்பிடுகிறான்.

அன்பார்ந்த வாசகர்களே! இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்த பிறகு, உங்களுக்கு எது சரியானது என்று தோன்றுகிறதோ அதை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துங்கள். எது சரியல்ல என்று உணருகிறீர்களோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.

மேலும், இந்தக் கட்டுரையில் ஹஜ் தொடர்பான பல்வேறு அனுபவங்கள், படிப்பினைகள் மற்றும் அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை சிந்தித்து வாசித்து, தங்களுடைய வாழ்க்கையிலும் ஹஜ் பயணத்திலும் பயனுள்ளவற்றை நடைமுறைப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கி.பி. 632 ல் தொடங்கி 2026 வரை 1438 ஹஜ்ஜுகள் இதுவரை முடிந்துள்ளது.

நபிகள் நாயகம் அவர்கள் பத்தாவது ஆண்டு, முதல் ஹஜ் செய்தார்கள்; அன்றிலிருந்து இன்று வரை 1447 வது ஹிஜ்ரி ஆண்டு நடைபெற்று வருகிறது. இவற்றில் ஒன்பது வருடங்களை கழித்து விட்டால் 1438 ஹஜ்கள் நடைபெற்றுள்ளதாக ஆகும்.

ஒவ்வொரு வருடமும் பலர் ஹஜ்ஜில் கலந்து கொண்டாலும் இவ்வாண்டு சவூதி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவர அமைப்பான stats.gov.sa வெளியிட்ட தகவலின்படி, 1447 ஹிஜ்ரி / 2026 ஹஜ்ஜில் மொத்தம் 1,707,301 (17 இலட்சத்து 7 ஆயிரத்து 301) பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த வருடத்து ஹஜ்ஜின் எனது அனுபவங்களும் வேறு பல ஹாஜிகளின்t அனுபவங்களையும் சுவாரசியமான நிகழ்வுகளையும் உங்களோடு பகிர்கிறேன்.

104 வயது மூதாட்டியின் ஹஜ் பயணம் 
===========================


இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள கெதிரி (Kediri)  பகுதியில் 1/7/1921 அன்று பிறந்த ம்பா மார்சியா (Mbah Marsiyah) எனும்  பெண் ஹஜ் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் "ஜெனாங்" (Jenang) எனப்படும் பாரம்பரிய இனிப்பு கஞ்சியை செய்து விற்று வந்த தொகையில் ஒரு தொகையை சேமித்து வைத்துக் கொண்டே வந்தார்.

இந்நிலையில் இவ்வாண்டு அந்தத் தொகையை எண்ணிப் பார்த்து ஹஜ்ஜுக்கு தேவையான தொகை கிடைத்து விட்டது என்று எண்ணிதான் ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்தார் ; அப்பொழுது அவருக்கு வயது104 .

இந்தோனேசிய அதிகாரிகள் அவரின் உடல் நிலை ஹஜ்ஜுக்கு ஏற்றதாக இருக்கிறதா என மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து விட்டு அவர் இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு போகலாம் என மருத்துவக் குழுவினர் அனுமதி வழங்கினார்கள்.

அதற்குப் பிறகு அரசாங்கம் கட்ட சொன்ன தொகையில் சிறிதளவு பற்றாக்குறை ஏற்பட்டது; அதை அவருடைய மகன் கொடுத்து உதவினார்; பின்னர்தான்  "ஹஜ் குழுவில் தேர்வு செய்யப்பட்டு விட்டோம்" என்பதை அறிந்து தமது அண்டை வீட்டாரிடமும் உறவினர்களிடமும் சொல்லிக்கொண்டு 22/05/2026 வெள்ளிக்கிழமை காலை மக்காவை வந்தடைந்தார். 

அவருடன் அவருடைய 67 வயது மகளும் வந்திருந்தார்; கைத்தடியின் உதவியோடு நடந்தும் அவ்வப்பொழுது சக்கர நாற்காலியை பயன்படுத்தியும் இந்த ஹஜ்ஜை மிகச் சிறப்பாக செய்து முடித்தார். 

நபி இப்ராகிம் (அலை) அவர்கள் 80 வயதிற்கு பிறகு மகன் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பெற்றெடுத்து அவருடைய திருமணத்திற்கு பிறகு தந்தையும் மகனுமாக சேர்ந்து கஃபாவை கட்டி முடித்த பிறகு அருகில் இருந்த அபீ குபைஸ் மலை மீது ஏறி உலக மக்கள் அனைவரையும் ஹஜ்ஜுக்கு வரும்படி அழைத்தார்கள்; அப்பொழுது அவர்களுக்கு வயது கண்டிப்பாக 100க்கும் மேலாக இருக்கும்.

இந்த ஆண்டில் வாழுகிற நாம் அறிந்தவரை 100 வயதிற்கு மேற்பட்ட இப்ராஹிம் (அலை) அவர்களின் அழைப்பை ஏற்று 100 வயதிற்கு மேற்பட்ட இந்தோனேசியாவின் ம்பா மார்சியா (Mbah Marsiyah) என்கிற பெண் தான் ஹஜ் செய்து இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. 

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹஜ் செய்த வயதில் இவ்வாண்டு ஒரு பெண்மணி ஹஜ் செய்திருக்கிறார் என்பதை அறியும் பொழுது இப்ராஹீம் நபியின் சுன்னத்தையே பின்பற்றியிருக்கிறார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஹஜ் செய்ய வேண்டும் என்கிற ஆசையும் அல்லாஹ்வின் நாட்டமும் இருந்தால் எந்த வயதிலும் ஹஜ் செய்து விடலாம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. 

ஹஜ்ஜுக்காக சேமிக்கப்படும் சேமிப்பு கண்டிப்பாக ஹஜ்ஜை செய்ய வைத்து விடும்; அந்த பொறுப்பை அந்தப் பணமே எடுத்துக் கொள்கிறது என்பதையும் இந்த நிகழ்வு உணர்த்துகிறது; எனவே ஹஜ் செய்ய ஆசைப்படுகிறவர்கள் சிறுக சிறுக சேமித்து வையுங்கள்.

ஹஜ் என்பது பணக்காரர்களுக்கான பயணம் அல்ல! உடல் ஆரோக்கியமானவர்களுக்கான பயணமும் அல்ல! உறுதியான எண்ணமும், நம்பிக்கையும் இருந்தால் இலகுவாக ஹஜ் பயணத்தை முடித்து விடலாம் என்பதை இந்த நிகழ்வு உணத்துகிறது.

ஹஜ் செய்ய வயது ஒரு தடை அல்ல! நூறு வயதை கடந்திருந்தாலும் ஹஜ் செய்து விடலாம் என்கிற நம்பிக்கையை இந்த நிகழ்வு நமக்கு வழங்குகிறது.

இப்ராஹீம் நபியின் அழைப்பிற்கு இந்த வயதில் தான் பதில் அளிக்க வேண்டும் என இறைவன் நாடி இருந்ததால், இந்த வயது வரை அவருக்கு ஹஜ்ஜுடைய நஸீபை அல்லாஹ் பிற்படுத்தி வைத்திருக்கிறான் என்பதையும் உணர முடிகிறது.

பொதுவாகவே இந்தோனேசியாவில் ஹஜ்ஜுக்காக காத்திருப்பவர்கள் 20 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. சில மாகாணங்களில் 45 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. 

(அரசு ஹஜ் (Regular Hajj) - அரசாங்கத்தின் மூலம் ஒருவர் ஹஜ் செய்ய வேண்டுமானால் அவர் நமது ஊர் நாணய மதிப்பில் 480000/ லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். இதில் சுமார் 2 லட்சம் ரூபாய்களை அரசாங்கம் மானியமாக வழங்கும்.

இந்த வயதான பெண்மணி இவ்வளவு நாள் காத்திருந்து இந்த வருடம் அந்த வாய்ப்பை பெற்று ஹஜ் செய்து இருக்கிறார்.

Haji Khusus (Plus) -  தனியார் ஹஜ் நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்; அதற்கு
19 லட்சம் ரூபாய் வரை கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

Haji Tanpa Antri / Furoda- உடனே பணம் கட்டி உடனே ஹஜ்ஜுக்கு செல்லும் திட்டத்தின் மூலம் ஒருவர் ஹஜ் செய்வதாக இருந்தால்  அவர் 30 லட்சம் ரூபாய் வரை கட்ட வேண்டி வரும்.

இவ்வாண்டு வரை இந்தோனேசியாவில் ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்திருந்தவர்களின் எண்ணிக்கை 55 லட்சம் பேர் ஆகும். அவர்களில் 221,000 பேர் மட்டுமே இவ்வாண்டு ஹஜ் பயணத்தை மேற்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரசாங்கம் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இவ்வளவு பேரு தான் ஹஜ்ஜுக்கு வர வேண்டும் என ஓர் எண்ணிக்கையை வரையறுத்துள்ளது;
இந்தோனேசியாவிலிருந்து 221,000 பேரும், இந்தியாவிலிருந்து 175,000 பேரும், பாகிஸ்தானிலிருந்து 180,000 பேரும், வங்காளதேசத்தில் இருந்து 127,000 பேரும், நைஜீரியாவிலிருந்து 66,910 பேரும் என இவ்வாண்டு கலந்து கொண்டார்கள்.

அரபு நாடுகள், ஈரான், ஈராக் போன்ற உலக இஸ்லாமிய நாடுகளில் இருந்து இவ்வாண்டு ஹஜ் செய்தவர்கள் மிக மிகக் குறைவு தான் என்றே சொல்ல வேண்டும்.

அதிலும் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் இருந்து இவ்வாண்டு அறவே ஹஜ்ஜுக்கு வரவில்லை என்று சொல்லும் அளவிற்குதான் சூழல் நிலவியது. தும்பை பூப்போன்று வெண்மையான ஆடை அணிந்து கஃபாவை வலம் வரும் ஈரானியரை இவ்வாண்டு நான் காணவே இல்லை.


சில ஹாஜிகளின் அனுபவங்கள் 
===============================

இவ்வாண்டும் தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தார் மூலம் ஹஜ்ஜுக்கு சென்றிருந்தேன்; 240 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் என்னோடு வந்திருந்தார்கள்; அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

"ஹாஜிகளே! நீங்கள் ஏற்கனவே உம்ரா செய்திருக்கலாம்; இப்பொழுது ஹஜ் செய்து முடித்திருக்கிறீர்கள்; இதில் மினா முஸ்தலிஃபா அரஃபா ஜமராத் ஆகியன புதிய அமல்களாக உள்ளது; தவாஃப் ஸயீ ஆகியன ஏற்கனவே செய்த அமல்கள் தான்!

ஹஜ்ஜுடைய ஐந்து நாட்களில் நீங்கள் மிகச் சிறப்பாக அமல் செய்திருக்கிறீர்கள்; இந்த அமலை எப்படி உணர்கிறீர்கள்? உங்கள் சிந்தனையில் என்ன மாதிரியான எண்ணங்களை தோற்றுவித்திருக்கிறது? உங்களிடம் மனநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இதுவரை செய்திராத இந்த அமல் உங்களிடம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?" என்று வினவினேன்.

ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த  ஒரு ஹாஜியார் என்னிடம் கூறினார் ; ஹஜ்ஜுக்கு புறப்படுவதற்கு முன்பு பல நூல்களைப் படித்தேன்; ஏற்கனவே ஹஜ்ஜுக்கு சென்றவர்களிடம் பல ஆலோசனைகளை பெற்றேன்; youtube களில் பல பயான்களை கேட்டேன்; பெரும்பாலானவர்கள் கஃபாவை பார்த்ததும் என்ன மாதிரியான துஆவை செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுத்திருந்தார்கள். 

நான் கஃபாவை பார்த்ததும் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்த எந்த துஆவும் நினைவுக்கு வரவில்லை; எந்த சிந்தனையும் இல்லாமல் வெற்றிடமாக  இருந்த இதயத்தை நான் அங்கு உணர்ந்தேன்; எதையும் யோசிக்க முடியவில்லை; எதையும் இதையும் யோசிக்காமல் இருந்ததையும் உணர்ந்தேன்; சில வினாடிகளுக்கு பிறகு நிதானம் வந்ததும், நான் சுய நினைவை பெற்றதும், என் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தை "இறைவா! என்னை நீ மன்னித்துவிடு" என்பதுதான்.

அவரே  முஸ்தலிஃபாவின் இரவில் முஸ்தலிஃபாவில் இருக்கும் போது  கூறினார்; எனக்கு 44 வயது ஆகிறது; எனது வாழ்நாளில் இப்பொழுது இருப்பதைப் போன்ற ஒரு சந்தோசமான, மகிழ்ச்சியான, இன்பகரமான, அமைதியான மன நிலையை நான் அனுபவித்ததே இல்லை; 

எனக்கு திருமணம் நடந்த போதும் எனக்கு முதல் குழந்தை பிறந்த போதும் மற்ற மற்ற குழந்தைகள் பிறந்த போதும், மிகப்பெரிய சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்த போதும் கிடைக்காத மகிழ்ச்சி இந்த இரவில் இந்த இடத்தில் நான் உணர்கிறேன்.

எனக்கு பிள்ளைகள் பிறந்த போதும், வேலைகள் கிடைத்த போதும், திருமணம் நடந்த போதும் ஒரு சில மணி நேரங்கள் எனக்கு அளவு கடந்த சந்தோஷத்தை கொடுத்து இருக்கலாம் ; ஆனால் தொடர்ந்து ஐந்து நாட்கள் நான் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தது இந்த ஐந்து நாட்கள் தாம்!

எனது இதயம் 110 முறை நிமிடத்திற்கு துடித்துக் கொண்டிருக்கிறது; உடல் மிக மோசமான நிலையில் இருப்பதாக உணர்கிறேன்; நான் அதையெல்லாம் தாண்டி நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; அது எப்படி என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இரவும் பகலும், இனிப்பும் கசப்பும், அமைதியும் துக்கமும் என எதிரும் புதிருமான அனைத்தும் ஒரே நேரத்தில் இருந்தும் அது எனக்கு சாதகமாகவே இருந்தது போல் உணர்ந்தேன். 

ஹஜ்ஜை முடித்துக் கொண்டு எனது அறைகளுக்கு நான் வந்த பிறகு நான் எதார்த்தமான நிலையில் தான் இருந்தேன்.

நமது உணர்வுகளுக்கு வண்ணமோ வடிவமோ கிடையாது; ஆனால் அந்த உணர்வுகள் நமக்குள்ளாகவே இருக்கின்றது என்பதை உணர்கிறோம்.

இந்த உணர்வுகளை தாங்கியுள்ள உடல் ஐந்து நாட்கள் சரியான தூக்கமின்மையாலும் அதிகமாக நடந்ததாலும் மிகப்பெரிய அசவ்கரியத்தை அனுபவித்து வருகிறது; ஆனால் உடனுக்குடன் வெளியே தெரியும் அசௌகரியம் நமக்கு பெரியதாக தெரியவில்லை; நாம் அனுபவிக்கிற சந்தோசம் மிகப்பெரிய அளவில் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது; அதையே பிறருக்கும் சொல்லும் மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

சிலர் தமது அசவ்கரியங்களை வெளிப்படுத்துவார்கள்; நான் என் சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன்.

ஒரே நேரத்தில் என் உடலில் அசௌகரியமும் உள்ளது; சந்தோசமான மனநிலையும் உள்ளது. இது ஒரே கரண்டில் இருந்து ஒரு புறம் அடுப்பு எரிவது போலும் மற்றொருபுறம் ஏசி மூலம் குளிர்ச்சி வெளிப்படுவது போலும் உள்ளது. 

மேலும் நான் இரவு நேரங்களில் பணி செய்வதில்லை; உயர்ந்த சம்பளங்களில் பணி கிடைத்த போதும் அதை நான் ஒதுக்கி விட்டேன்; ஆனால் இந்த ஐந்து நாள் இரவில் எனக்கு தூக்கம் இல்லை; அது எனக்கு பெரிதாக  தெரியவில்லை.

நபி (ஸல்) அவர்கள் ஸவ்ரு குகையில் இருந்தபோது எதிரிகளின் நடமாட்டத்தை உணர்ந்த போதும் பதட்டப்படாமல் இருந்தார்கள்; அப்பொழுது அவர்கள் மீது அல்லாஹ் அமைதியை -  சகீனத்தை இறக்கினானே அதுபோல் இந்த ஐந்து நாளும் என் மீது இறைவன் சகீனத்தை இறக்கி இருப்பானோ என்று எண்ணுகிறேன்.

இன்று ஹஜ் செய்து முடித்தது போல் மீண்டும் மீண்டும் பல ஹஜ்ஜிகளை செய்து இது போன்ற அனுபவங்களை சந்தோஷங்களை மகிழ்ச்சியை பெறுவதற்கு நான் முயற்சி செய்வேன்.

அவரது மனைவி கூறினார்; எங்கள் வீட்டில் விலை உயர்ந்த மெத்தை, ஏ.சி. அறை என எல்லா வசதியும் உள்ளது; ஆனால் படுத்தால் உறக்கம் வராது. 

லைட்டு எறிந்தாலும், சப்தங்கள் கேட்டாலும் உறக்கம் அறவே வராது; ஆனால் இந்த ஐந்து நாட்களில் ஒன்றரை அடி இடத்தில் மற்றவருடைய உடல் மீது நான் உரசிக்கொண்டும், லைட் வெளிச்சத்திலும், மக்கள் நசநசவென பேசிக் கொண்டிருக்கும் போதும் நான் உறங்கினேன். 

மினாவில் படுக்கும் இடம் மிகக் குறுகிய நிலையில் இருப்பதாக சொன்னார்கள்; ஆனால் எனக்கு அந்த இடம் மிக விசாலமாகவே இருந்ததாக உணர்கிறேன்; எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் சிறிய இடமாக இருந்தாலும் தூக்கமும் அமைதியும் கிடைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்; எனக்கு அந்த குறுகிய இடத்தில் அனைத்து வகையான அமைதியும் கிடைத்தது.

முஸ்தலிஃபாவில் ஜல்லி கற்களின் மீது ஒரு மெல்லிய துணியை விரித்து கற்கள் உடலை குத்த குத்த உறங்கினேன்; அதே நேரம் கடுமையான உஷ்ணம் இருந்த போதும் நான் உறங்கினேன்.

எனக்கு எப்பொழுது படுத்தாலும் எங்கு படுத்தாலும் தூக்கம் வந்து கொண்டே இருந்தது; இது போன்ற ஒரு நிலையை நான் என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. 

ஸவ்ரு குகை அருகில் நபி ஸல் அவர்களின் தலையை வெட்டுவதற்கு எதிரிகள் நடமாடிக் கொண்டிருந்த வேளையில் அபூபக்கர் (ரலி) அவர்களின் தொடையின் மீது தலையை வைத்து அமைதியாக படுத்து உறங்கியது போல் நான் உறங்கினேன். இது இறைவன் எனக்கு அளித்த மிகப்பெரும் பாக்கியம்.

தொழுகை ஐந்து நிமிடங்களில் முடிந்து விடும்; நோன்பு 14 மணி நேரத்தில் முடிந்து விடும்; ஜகாத் ஒரு சில வினாடிகளில் முடிந்து விடும்; ஆனால் ஹஜ் ஐந்து நாட்கள் செய்ய வேண்டிய அமல். 

சொந்த நாட்டில் இல்லாமல், நமது மொழி இல்லாத ஊரில், சொந்த வீட்டில் இல்லாமல் வேறு ஒரு இடத்தில் ஐந்து நாட்கள், கற்கால மனிதர்கள் காடுகளில் வாழ்ந்தது போல் இந்த காலத்திலும் நம்மை கற்கால மனிதர்கள் போல் இறைவன் இருக்கச் செய்து அதில் சந்தோஷத்தையும், நிம்மதியையும் நிரப்பமாக வழங்கி இருக்கிறான் என்றால் அதை என்னவென்று சொல்வது? 

இந்த ஐந்து நாட்களில் நான் எந்த வகையான சிரமத்தையும் சந்திக்கவே இல்லை என்று தான் சொல்லுவேன். 

மினா உடைய ஐந்து நாட்களில் முஸ்தலிஃபாவில் இருந்து மீண்டும் மினாவிற்கு வந்து சேர்வது ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடப்பது போன்று அல்லது கம்பி மேல் நடப்பது போன்று என்று சொல்லலாம். 

யார் முஸ்தலிஃபாவில் இருந்து மினாவிற்கு விரைந்து வந்து சேர்கிறார்களோ அவர்களே மிகப்பெரும் பாக்கியவான்கள் ஆவார்; அந்த வகையில் நாங்கள் காலை 6: 30 மணிக்கெல்லாம் வந்து விட்டோம். 

யார் எந்த இடத்தில் கஷ்டப்பட்டதாக சொல்கிறார்களோ அதே இடத்தில் நாங்கள் சிரமமே இல்லாமல் சந்தோஷமாக நிம்மதியாக இருந்தோம்" என்று ஒரு தம்பதியர் கூறினார்கள்.


என்னுடனும் 
இறைவன் இருந்திருக்கிறான்...
==================================


ஒரு கல்லூரியில் பிரின்ஸ்பால் மற்றும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய விஞ்ஞானியான ஹாஜியார் கூறினார்; 

இறுதிக் கடமையான ஹஜ்ஜை சற்று வயதான பிறகு செய்து கொள்ளலாம் என நான் தெரிந்தே தாமதப்படுத்தியிருந்தேன்; இப்பொழுது 68 வது வயதில் ஹஜ்ஜை செய்து முடித்து இருக்கிறேன்; ஆனால் இப்பொழுது உணர்கிறேன்; இதை இளமையிலேயே செய்து இருக்கலாமோ என்று.

என்னால் அதிகமாக நடக்க முடியாது; அதை நான் அஞ்சிக் கொண்டே இருந்தேன்; ஆனால் ஹஜ்ஜுடைய ஐந்து நாட்களில் மிக அதிகமாக நடந்து விட்டேன்; எனக்கு கால் வலியே ஏற்படவில்லை.

அறைகளுக்கு வந்து ஓய்வெடுத்து வரும் நேரத்திலும் கூட அன்று நடந்ததால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை; அது எனக்கு ஏன்? எப்படி? என்று ஆச்சரியமாகவே இருக்கின்றது. 

அதுபோலவே எனக்கு அசிடிட்டி ப்ராப்ளம் உள்ளது; ரமலான் நோன்பு எப்படி நோற்பேன் என அஞ்சி கொண்டே இருப்பேன்; ஆனால் ரமலான் வந்ததும் நோன்பு நோற்கத் தொடங்கி விடுவேன். 

அந்த பிராப்ளம் இருந்ததாக நினைவுபடுத்தும் எந்த உடல்நிலை மாற்றமும் என்னில் ஏற்படாது; அதுவும் ஏன்? எப்படி? எதற்கு? என்று இன்றுவரை ஆச்சரியமாகவே இருக்கின்றது.

கடந்த 15 வருடங்களாக நான் தஹஜ்ஜுத் தொழுகையை தொழுது வருகிறேன்; மற்றும் இஸ்லாத்தின் நான்கு கடமைகளையும் மிகச் சரியாக உரிய நேரத்தில் நிறைவேற்றி வருகிறேன். 

எனவே வளமையாக செய்து வரும் அமல்களில் ஒன்றாக இந்த ஹஜ்ஜையும் மிக லேசாகவே செய்து முடித்து விட்டேன்; அதனால் இதில் எனக்கு எந்த சிரமமும், கஷ்டமும் இருந்ததாக தெரியவில்லை உணரவில்லை. 

இறுதிக் கடமையை என் இறுதி (முதுமை) காலத்தில் எந்த வகையான சிரமத்தையும் அனுபவிக்காமல் செய்தது "இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று அல்லாஹ் திருமறையில் சொல்வது போல் என்னோடும் இருந்திருக்கிறான் அதனால் தான் எந்த சிரமத்தையும் நான் அனுபவிக்கவில்லை என்று எண்ணுகிறேன்" என கூறினார்.


நான் இறைவனை நினைப்பதால் இறைவன் என்னை நினைப்பதாக அறிகிறேன்
=========================≠===========


சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள ஒரு ஹாஜியார் கூறினார் ; 10/4/2000 அன்று நான் கடலூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தேன்; செங்கல்பட்டு அருகே நான் வந்த பஸ்ஸும் எதிரில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே 13 பேர் பலியானார்கள். 

நான் அமர்ந்திருந்த சீட்டின் வலது புறம் இருந்தவரும் இடதுபுறம் இருந்தவரும் இறந்து விட்டார்கள்; எனக்கு சிறு சிராய்ப்பு கூட ஏற்படவில்லை; அதனை அறிந்து நான் அதிருந்தேன். 

குற்றுயிரும் குலை உயிருமாக மருத்துவமனைக்கு சென்ற வேறு சிலரும் இறந்து போனார்கள்; பலருக்கு மீள முடியாத பல உடல் உறுப்புகளை இழந்திருந்தார்கள். 

ஆனால் நான் மிகவும் பாதுகாப்பாக இருந்தேன்; தினத்தந்தி நிருபர்கள் என்னிடம் நேரடியாக வந்து பேட்டி எடுத்தார்கள்; அப்பொழுது அந்த விபத்தை நேரடியாக பார்த்த ஒரே சாட்சியாக நான் மட்டுமே இருந்தேன்; ஓட்டுநர் இறந்துவிட்டார்; நடத்துனர் மீள முடியாத கோமாவில் இருந்தார்; மற்ற அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டு பேச முடியாத நிலையில் இருந்தார்கள். 

இறைவன் என்னை மட்டுமே பேச வைத்திருந்தான்; ஏன் என்று நான் யோசிக்கத் தொடங்கினேன்; இதற்கு முன்பு நான் ஜும்ஆ தொழுகை, பெருநாள் தொழுகை மட்டுமே தொழுது வந்தேன். 

இந்த சம்பவத்திற்கு பிறகு இஸ்லாத்தின் அனைத்து கடமைகளையும் மிகச் சரியாக அதனதன் நேரத்தில் நிறைவேற்றி வருகிறேன் அல்ஹம்துலில்லாஹ்! 

அதன் தொடர்ச்சியாகவே இன்று இந்த ஹஜ்ஜையும் செய்து முடித்திருக்கிறேன்; எனக்கு என் ஆழ்மனதிலும் உள் மனதிலும் ஒரு எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கின்றது. "இறைவன் உனது ஹஜ்ஜை ஒப்புக்கொண்டு விட்டான்; நீ கவலைப்படாதே!" என்ற எண்ணம் எனக்குள் மீண்டும் மீண்டும் ஒழித்துக் கொண்டே இருக்கின்றது. 

எனவே நான் நம்பிக்கையோடு இந்த ஹஜ்ஜில் இருந்து திரும்புகிறேன்; விபத்து நிகழ்ந்த சம்பவத்துக்கு பிறகு நான் இறைவனோடு ஒன்றிவிட்டதின் அடையாளமாகவே இந்த மன உதிப்பு ஏற்படுவதாக அறிகிறேன். நான் தினமும் மணிக்கணக்கான நேரங்கள் திக்ர் செய்து வருகிறேன்; அந்த இறை நினைவின் பொருட்டால் எனக்கு இப்படி ஒரு நினைவு உண்டாகி இருக்கிறது என உணர்கிறேன்.


என்னைப் போல் யாரும் இல்லை 
=================================

சமீப காலத்தில் இஸ்லாத்திற்கு வந்த ஒரு இளைஞர் எங்களோடு ஹஜ் செய்தார்; அவர் கூறினார்; 

ஹஜ்ஜுக்கு செல்கிறவர்கள் தமது உறவினர்களிடம் சொல்லிக் கொள்ள செல்லும் பொழுது அந்த உறவினர்கள், "எங்களுக்கும் ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றும், நபிகள் நாயகத்திற்கு ஸலாம் சொல்லும் பாக்கியம் கிடைக்க வேண்டும், அந்த கஃபாவை எங்கள் கண்களால் காணும் பாக்கியம் கிடைக்க வேண்டும்" என்று எங்களுக்காகவும் நீங்கள் துஆ செய்துவிட்டு வாருங்கள்" என்று சொல்லுவார்கள். 

நாம் திருமண பத்திரிக்கை எடுத்துச் செல்லும் பொழுது, "எங்கள் வீட்டிலும் திருமணம் நடக்க வேண்டும்" என்று யாரும் சொல்ல மாட்டார்கள். வீடு திறப்பு விழாவிற்கு அழைப்பு கொடுக்க செல்லும்பொழுது "நானும் இது போல் வீடு கட்ட வேண்டும் அதற்கு நீங்கள் துஆ செய்யுங்கள்" என்று யாரும் சொல்ல மாட்டார்கள்; இன்னவர் இறந்துவிட்டார் என்று சொல்லும் பொழுது "நானும் இறந்து விட வேண்டும்" என யாரும் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் ஹஜ் அல்லது உம்ரா பயணத்தை சொல்லிக் கொள்ளும் பொழுது மட்டும் மக்கள் அனைவரும் அதை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் இது இஸ்லாமியர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தின் மீதுள்ள பற்றுதலை காட்டுகிறது என்றே சொல்ல வேண்டும்.

மேலும் அவர் கூறினார்; "ஹஜ் எனக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம்; நபிகள் நாயகம் அவர்கள் சொல்லுவார்கள்; ஒருவர் இஸ்லாத்தில் இணைந்து விட்டால் அவர் அன்று பிறந்த பாலகனாக ஆகிறார்; ஒருவர் ஹஜ் செய்து விட்டால் அவரும் அன்று பிறந்த பாலகனாக ஆகிறார் என்று சொல்லுவார்கள். 

அந்த இரண்டு பாக்கியங்களும் எனக்கு மட்டுமே  கிடைத்திருக்கிறது; அனேகமாக இந்த குழுவினரில் வந்தவர்களில் இரண்டு பாக்கியங்களைப் பெற்றவன் நானாக மட்டுமே இருப்பேன் என்று எண்ணுகிறேன். அல்லாஹ் எனக்கு இந்த ஹஜ்ஜுடைய பாக்கியத்தை வழங்கியது மாபெரும் கருணையாகும். 

இந்த ஹஜ்ஜை செய்து விட்டு திரும்புகிற நான் எனது பழைய வாழ்க்கைக்கு சென்று விடாமல் என்னை இறைவனும் பாதுகாக்க வேண்டும்; என்னை நானும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; அப்படி செய்கிற போது மட்டுமே அந்த இரண்டு பாக்கியங்களுக்கும் உரியவனாக நான் ஆவேன்; இந்த இரண்டு பாக்கியங்களும் என்னை விட்டும் அகன்று விடாமல் இருக்க நீங்களும் துஆ செய்யுங்கள்" என்று கூறினார்.



என்னால் எல்லாம் முடியும் 
======≠=====================


துபாயில் பணிபுரிந்து வந்த ஒரு ஹாஜியார் கூறினார் ;15 வருடங்களுக்கு முன்பு எனது தாயார் ஹஜ் செய்தார்; அவர் திரும்ப வந்ததிலிருந்து  நான் ஹஜ் செய்வதற்கு முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்; இந்த வருடம் தான் அது சாத்தியமானது. 

எனது மனைவி இவ்வாண்டு ஹஜ் செய்யலாம் என செப்டம்பர் மாதத்தில் கூறினார் ; உடனே முயற்சியில் இறங்கினேன் ; பல தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தாரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது அவர்கள் "இடமில்லை" என சொல்லி விட்டார்கள்; நான் மனம் தளர்ந்து போனேன். 

ஆனாலும் தொடர்ந்து விசாரித்த போது இறுதியாக உங்கள் ஹஜ் சர்வீஸில் இடம் கிடைத்தது; இடம் கிடைத்த பிறகு இரண்டு நபர்கள் செல்வதற்கு ஏற்ற பெருந்தொகை என்னிடம் இல்லை; சற்று மனம் தடுமாறினேன். 

15 வருடங்களாக துஆ செய்து கொண்டும் முயற்சி செய்து கொண்டும் இருந்தும் கூட இன்னும் தடங்கலாகிக் கொண்டே இருக்கிறதே என வருந்தினேன்.

பின்னர் ஒரு வழியாக பணத்தைத் திரட்டி, முழு பணத்தையும் ஒரே நேரத்தில் கட்டி, என் பயணத்தை உறுதி செய்து கொண்டேன்.

நான் துபாயில் வசித்து வருகிறேன்; எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்; அவர்களை யாரிடம் விடுவது என யோசித்து யோசித்து குழம்பிப் போயிருந்தோம்; கடைசியில் எனது மூத்த மகள் "நானே அனைவரையும் பார்த்துக் கொள்கிறேன்" என தைரியம் கொடுத்ததாள்! அல்லாஹ்வின் கண்காணிப்பில் எனது பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு நாங்கள் இருவரும் வந்து விட்டோம்; அவர்கள் தனியாகத்தான் இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு நாங்கள் பலமுறை உம்ரா செய்திருந்தாலும் ஹஜ் இப்பொழுதுதான் முதன்முறையாக செய்கிறோம்; ஆலிம்களின் சரியான வழிகாட்டுதல்களில் இந்த ஹஜ்ஜை செய்து முடித்தது எங்களுக்கு மிகப்பெரும் மன நிறைவை தந்திருக்கிறது. 

ஏனென்றால் இதற்கு முன்பு வரும்பொழுதெல்லாம் ஏதோ வந்தோம் போனோம் என்று தான் இருந்தோம்; ஆனால் ஆலிம்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் செய்த இந்த ஹஜ் மிகப்பெரிய நிறைவை தருகிறது.

Motivation - தன்னம்பிக்கையூட்டும் கருத்துக்களை எனது அலுவலகத்தில் பணிபுரிவோரிடம் அதிகமாக பேசுவேன்; அது, "என்னால் எல்லாம் செய்து விட முடியும்" என்கிற நம்பிக்கையை ஒவ்வொருவரும் பெற்று விட வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவேன்.

நான் சொல்லிக் கொண்டிருந்த இந்த வார்த்தைகள் இறைவனுக்கு இணை வைக்கும் வார்த்தை என்பதை இங்கு வந்த பிறகு, ஆலிம்களின் பயான் மூலமாக உணர்ந்தேன். 

என் ஹஜ் பயணத்தையே யோசித்துப் பார்த்தேன்; "என்னால் எல்லாம் முடியும் என்று இருந்திருந்தால் ஏன் 15 வருடங்களாக என்னால் ஹஜ் செய்ய முடியவில்லை?" என எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். 

அப்பொழுதுதான், "அல்லாஹ்வினுடைய நாட்டத்தின் அடிப்படையிலேயே நான் ஹஜ் செய்திருக்கிறேன்; என் வலிமையினால்  செய்யவில்லை" என்பதை உணர்ந்தேன்" என தன் உள்ளத்தில் இருந்த உண்மையான எண்ணங்களை வெளிப்படுத்தினார்.

மேலும் ஹஜ்ஜுக்காக மக்கா மதீனாவில் தங்கி இருக்கக்கூடிய காலங்களில் ஆலிம்களாகிய நீங்கள் உங்களுடைய பயான்களில்  ஹஜ் சார்ந்த விஷயங்களாகவே பல தகவல்களை எங்களுக்கு சொன்னது மிகவும் புதிய தகவல்களாகவே இருந்தன;  இதுவரை நமதூர் பயான்களில் கேள்விப்படாத விஷயங்களாகவே இருந்தன; அதனால் ஹஜ்ஜில் கவனம் செலுத்துவதற்கு அவை துணையாக இருந்தது.

ஹஜ்ஜுடைய காலங்களில் அல்லாஹ்வுடைய நினைவோடும் அவன் விரும்பிய அடிப்படையில்  ஹஜ்ஜுடைய நாட்களை கழித்தது போலவும் எனது சொந்த ஊருக்கு திரும்பிய பிறகும் வாழ வேண்டும் என முடிவு செய்து இருக்கிறேன். 

இந்த முடிவை செயல்படுத்த தொடர்ந்து முயற்சிப்பேன்; தீனுடைய சூழல்களில் தொடர்ந்து வாழ்வதற்கு என்னை நான் அர்ப்பணித்துக் கொள்வேன்.

ஒரு ரயில் செல்வதற்கான அனைத்து தடங்களையும் தயார் செய்து ரயில் பெட்டிகளை அதன் ட்ராக்கில் வைத்தது போல் ஆலிம்களாகிய நீங்களும் உங்கள் நிறுவனத்தாரும் என்னையும் என்னை போன்ற ஹாஜிகளையும் நீங்கள் உருவாக்கி வைத்து விட்டீர்கள். 

நாங்கள் இனி ஒரே ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்க வேண்டியது மட்டுமே பாக்கி; நான் கண்டிப்பாக ஒரே டிராக்கில் ஓடுவேன் என நம்புகிறேன்.



ஜித்தா வந்துட்டோமா ?
சார்ஜாவில் தான் இருக்கிறோம்.....
====================================

அல் அமானத் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தின் மூலம் பல ஆண்டுகளாக நான் வழிகாட்டியாக சென்று ஹஜ் செய்து வருகிறேன். ஒவ்வொரு வருடமும் ஒரு மாதிரியான பிரச்சனைகளை சந்திப்போம்; அடுத்த வருடம் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து அவற்றை தவிர்க்க முயற்சிப்போம்; அது போலவே திட்டமிட்டு அந்தப் பிரச்சினைகளில் இருந்து எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்ளவும் செய்வோம்.

ஆனால் ஒவ்வொரு வருடமும் இதுவரை சந்தித்திராத புதிய பிரச்சனைகளை சந்திப்போம் ;அதை வழிகாட்டிகளாகிய நாங்களும் ஹாஜிகளும் சந்தித்தே ஆக வேண்டும்; அப்படி இவ்வாண்டு சந்தித்த புதிய பிரச்சனைகளை சொல்கிறேன் கேளுங்கள்.

இதை சொல்வதின் நோக்கம் ஹஜ் செய்ய கூடியவர்கள் இறையச்சத்தையும், பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் எவ்வளவு எடுத்து வந்தாலும் அது பற்றாக்குறையாகவே இருக்கும். 

1.  50க்கும் மேற்பட்ட ஹாஜிகளை அழைத்துக்கொண்டு ஏர் அரபியா விமானத்தின் மூலம் சார்ஜா சென்றடைந்தோம்! அங்கிருந்து 7:55 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 8:15 மணி வரை மக்களை ஏற்றிக் கொண்டு இருந்தார்கள் ; 

பிறகு விமானம் ஓடுதளத்தில் ஓட துவங்கியதும் நான் உறங்கி விட்டேன்; நீண்ட நேர உறக்கத்திற்கு பிறகு விழித்ததும் தரையைக் கண்டு, "ஜித்தா வந்து விட்டோமா?" என அருகில் இருந்தவரிடம் கேட்டேன்; அவர், "நமது விமானம் இன்னும் புறப்படவே இல்லை" என்று கூறினார் நான் அதிர்ச்சி அடைந்தேன். 

"இறங்க வேண்டிய ஜித்தா விமான நிலையத்திலிருந்து இறங்குவதற்கான அனுமதி கிடைக்காததால் இங்கிருந்து புறப்படவே இல்லை" என்று கூறினார். 

30-க்கும் மேற்பட்ட முறை நான் ஹஜ் உம்ராக்களுக்கு விமானத்தில் சென்று இருக்கிறேன்; ஆனால் ஒருமுறை கூட இவ்வாறான பிரச்சினையை சந்தித்ததே இல்லை; 3 மணி நேரம் விமானத்திற்கு உள்ளாகவே 175 ஹாஜிகள் இருந்தவாறு மிகப்பெரும் சிரமத்தை சந்தித்தார்கள். 

ஆனால் இது ஆலிம்களின் தவறான வழிகாட்டுதலாலோ, எங்களது ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தின் தவறான வழிகாட்டுதலாலோ ஏற்பட்ட தவறு அல்ல என்பதால் எங்களுக்கு ஆறுதல்! 

ஆனால் மொத்தத்தில் எல்லோருக்கும் சிரமம் ஏற்பட்டது. இதனால் இதற்குப் பின்னர் நிகழ வேண்டிய அனைத்து காரியங்களும் பிற்படுத்தி செய்ய வேண்டிய சூழல் உண்டானது; அதனால் சில பல சிரமங்களை சந்தித்தோம்.

°=°=°=°=

2.  துல்ஹஜ் மாதத்தின் எட்டாவது நாள் பிறை பிறந்ததும் நள்ளிரவில் மினாவிற்கு பஸ் மூலம் செல்வது வழக்கம். துல்ஹஜ் பிறை 8 பிறப்பதற்கு முன்பு அதாவது மக்ரிபுக்கு முன்பு மாலை 4: 00 மணிக்கு முஅல்லிம் அலுவலகத்தில் இருந்து "ஐந்து மணிக்கு பஸ் வந்துவிடும் தயாராக இருங்கள்" என்று அலைபேசியில் அழைத்து சொன்னார்கள்; 

நாங்களும் ஹாஜிகளிடம் சொல்லி அனைவரையும் தயார் படுத்திவிட்டோம். ஆனால் அதிகாலை ஐந்து மணிக்கு தான்  இறுதி பஸ் வந்தது. 

நாங்கள் ஏற்கனவே ஹாஜிகளிடம் சொல்லியிருந்தது போல் அவர்கள் மிகப் பொறுமையாகவும் சகிப்புத்தன்மையோடும் இருந்து தங்களை அந்த சூழ்நிலைக்கு ஏற்றவர்களாக மாற்றிக் கொண்டார்கள்.

இதுவரை சந்தித்திடாத பல பிரச்சனைகளை நாங்கள் சந்தித்தாலும் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் இருந்து ஹஜ்ஜை மிகச் சிறப்பாக செய்து முடித்தோம். 

எனவே ஹஜ்ஜுக்கு புறப்படுகிறவர்கள் முதலில் பொறுமையையும் சகிப்புத்தன்மையும் தமக்குள் அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும்; மௌனத்தை கடமையாக நினைத்து கடைப்பிடிக்க வேண்டும். இறைவனோடு உரையாடுவதற்கே அன்றி வாயைத் திறக்கக் கூடாது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்